முதியோர் வாழ்க்கைமுறை - சில கருத்துக்கள்
முதியோர் வாழ்க்கைமுறை - சில கருத்துக்கள்
“‘முதுமை
என்பது ஆனந்தமாக ரசிக்க வேண்டிய பருவம். முதுமையை ரசிக்கத் தெரியாதவன் முட்டாள். நான்
முதுமையை ரசித்துக்கொண்டிருக்கிறேன்.” என்று கேரள மாநிலத்தின் முன்னாள் முதுபெரும்
அரசியல் பிரமுகர் சமீபத்தில் அளித்த பத்திரிகை பேட்டியில் கூறினார் .
வாழ்க்கையில் ,பல தேவைகளில் பணமும் ஒன்று. ஆனால்.
பணமும் பொருளும் மட்டுமே வாழ்க்கை அல்ல . பல பருவங்களைக்கடந்து, தற்போது முதுமைப்பருவத்தில்
இருக்கிறோம். நினைத்துப்பார்த்தால் ஒவ்வொரு பருவத்திலும் -வாலிபத்திலும் -நடுத்தர வயதிலும்
வேலை செய்து அல்லது தொழில் செய்து சம்பாதித்திருந்தாலும் மனநிறைவோடு இருந்தோமா -என்றால்
இல்லை. ஒவ்வொரு நிலையிலும் தேவைகள் அதிகரித்துக்கொண்டே இருக்க ,பிரச்னைகளும் போராட்டங்களுமாக
வாழ்க்கை அமைந்தது.
அமைதியாக கழிக்க வேண்டிய முதுமையிலும் பணம் -பொருளைத்தேடி
ஓடிக் கொண்டே இருக்க வேண்டாம். முதுமையில் ஓய் வூதியம் - சேமிப்புக்கு கிடைக்கும் வட்டி
- சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வாடகை வருமானம் ஏதாவது ஒரு வகையில் கிடைக்கும். வறுமை
கோட்டுக்கு கீழே இருந்தால் அரசாங்கம் தரும் முதியோர் ஓய்வூதியம் கிடைக்கும். இதன் மூலம்
யாரையும் சார்ந்திருக்காமல் மன நிறைவோடு வாழலாம்.
உயர்பதவியில் பணியாற்றிய நிறுவனங்களில் கட்டாயத்திற்காகவோ
அல்லது சொந்த தொழில் நிறுவனங்களில் பணியாற்ற வேண்டிய நிலை இருந்தால் ,அதை முழு நேரப்பணியாக
- வருமான நோக்கில் இல்லாமல் - கீழ் நிலை அலுவலர்க்கு ஆலோசனை கூறி வழிகாட்டும் வகையில்
, அல்லது அடுத்த தலைமுறையினரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து வழிநடத்தும் வகையில் பகுதி
நேரமாக குறுகிய காலத்திற்கு கவனிக்கலாம்.
நாம் பொறுப்பில் இல்லாவிட்டால் நிறுவனமோ -சொந்ததொழிலோ
- குடும்பமோ மோசமாக பாதிப்படையும் என்ற எண்ணத்துடன் முதுமையிலும் செயலாற்றுவது ஈகோ
தவிர வேறில்லை . அடுத்து பொறுப்பேற்கும் அலுவலர்கள் -நிர்வாகிகள் -அல்லது வாரிசுகள்
நன்றாகவே செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு, தேவையான
நேரத்தில் தக்க ஆலோசனைகள் கூறி வழிகாட்டுவதோடு நிறுத்திக் கொள்ளலாம். அதற்காக இப்படித்தான்
செய்யவேண்டும் என கட்டாயப்படுத்துவதோ, நமது கருத்துக்களை அவர்கள் மீது திணிப்பதோ தவறு.
அதனால் அவர்களுக்கு முதியோர் மீது வெறுப்புணர்ச்சி வளர காரணமாகிவிடும். விரும்பினால் , உடல்நிலை ஒத்துழைத்தால் , ஏதேனும் தொண்டு நிறுவனங்களில் சேவை மனப்பான்மையுடன்
பணியாற்றி உதவலாம்.
முதுமையில் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழப்பழகுவது
நல்லது. எதிர்பார்ப்புகள் இருந்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏமாற்றம் தாங்காமல் மனம்
வேதனைப்படும். உதாரணமாக , வார இறுதி விடுமுறை நாளில் , மகனோ மகளோ நம்மை கோவிலுக்கு
- ஏதேனும் நிகழ்ச்சிக்கு - அல்லது மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்செல்வார்களென எதிர்
பார்த்திருப்பார்கள். ஆனால் அவர்கள் வேறு தவிர்க்க முடியாத காரணத்தால் அழைத்துச்செல்ல
முடியாமல் போகலாம். அதனால், அவர்களுக்கு நம் மீது அக்கறையில்லை என்ற வருத்தமும் மனவேதனையும்
ஏற்படும். ஏதேனும் இசை நிகழ்ச்சி , ஆன்மீக
சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல விரும்பினால் , அவர்கள் உடன் வர இயலாமல்
, தனியாக அனுப்பவும் பயந்து இப்போது போக வேண்டாமே என கூறலாம். இம்மாதிரியான சூழ்நிலைகளில்
ஏமாற்றம் , மனவேதனை காரணமாக உடல்நல பாதிப்பும் ஏற்படலாம். எனவே எதிர்பார்ப்புகளோ ,
ஆசைகளோ இல்லாமல் இருக்க பழகுவது நல்லது.
வாழ்க்கையில் , குறிப்பாக முதுமையில் ரசனை உணர்வு
மிக அவசியம் . விருப்பப்பட்ட நல்ல புத்தகங்கள் படிப்பது , விரும்பும் இசையை கேட்பது
,அருகில் உள்ள நண்பர்கள், உறவினர்களுடன் அன்புடன் உரையாடுவது எல்லாவற்றிலும் ரசனை உணர்வு
இருந்தால் ஆனந்தமே. வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் பொழுது போக்குவதால்
மகிழ்சசியும் மன அமைதியும் கிட்டும். குழந்தைகளுடன் விளையாட்டு , கதைகள் சொல்வது
, சிறிய வழிபாட்டுப்பாடல்கள் சொல்லிக்கொடுப்பது
, ஓவியம் வரைவதில் - பள்ளி வீட்டுப்பாடங்களை செய்வதில் உதவுவது எல்லாம் குழந்தைகளை
முதியோர்களுடன் பாசமாக பழக வைத்துவிடும். நர்சரி-பிரைமரி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள்
இருந்தால் , பள்ளியும் வீட்டின் அருகில் இருந்தால் ,அவர்களை காலையில் உடன் அழைத்துச்சென்று
பள்ளியில் விட்டு ,மாலையில் சென்று திரும்ப அழைத்து வரலாம். அப்போது குழந்தைகள் ஏதாவது
பேசிக் கொண்டோ ,கேள்விகள் கேட்டுக்கொண்டோ உடன் வரும். இதையெல்லாம் ரசித்து , அனுபவித்து
பார்த்தால்தான் அதில் உள்ள ஆனந்தம் புரியும். குழந்தைகளிடம் கோபமாக பழகக்கூடாது . குழந்தைகளின்
விஷமங்களை, இரைச்சலை சங்கடமாக நினைக்காமல் வேடிக்கையாக ரசித்தால் அவர்களிடம் கோபம்
வராது.
குடும்பத்தில் முதியவர்களுக்கு மற்றவர்களால் தொந்தரவு
ஏற்படக்கூடாது என்பது போல ,முதியவர்களும் மற்றவர்களுக்கு சிரமங்கள் தரக்கூடாது என்று
எண்ணவேண்டும். அனைவரிடமும் கோபம் இல்லாமல்
அன்போடு –அளவோடு உரையாடுவது ,இயன்றவரை வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக்கொள்வது என்று
இருந்தால் அவர்களும் முதியவர்களை சுமையாக கருதாமல் உரிய மரியாதையும் காட்டுவார்கள்.
முடிந்தால், வீட்டில் மின்சாரக்கட்டணம் ,டெலிபோன் கட்டணம் கட்டுவது போன்ற வேலைகளை முதியவர்கள் பொறுப்பெடுத்துக்கொண்டு
விருப்பமுடன் செய்வதால் , அவர்களுக்கு சிரமம் குறையும். நம்மால் முடிந்த உதவியை செய்தோம்
என்ற மன நிறைவு முதியோர்க்கு ஏற்படும்.
தவிர்க்க முடியாத குடும்ப சூழ்நிலை காரணமாக நெருங்கிய
உறவுகள் -மகன்-மகள் தங்களின் வயதான பெற்றோரை தங்களுடன் வைத்துக்கொள்ள இயலாமல் பாதுகாப்பாக
முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட விரும்பலாம். அந்த நிலையில் மனத்தளர்ச்சியடையாமல்,
விரக்தியடையாமல் மன நிறைவுடன் முதியோர் இல்ல
வாழ்க்கையை ஏற்று கொள்ளலாம். படிக்கும் வயதில் குழந்தைகளை பள்ளி - கல்லூரி விடுதிகளில்
சேர்ப்பதைப்போல என்று இதையும் மனதளவில் ஏற்கும் உறுதி வேண்டும். அந்த இல்லத்திலும்
, உடன் இருக்கும் சக முதியோர்களுடன் நட்புறவுடன் பழகி சூழ்நிலையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளலாம்.
தங்கள் உடல்நலம் குறித்து முதியோர் தக்க கவனம் செலுத்த வேண்டும்.
மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை நேரம் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகவும்
இயலாத நிலையில் இருந்தால் மட்டுமே மருந்துகள் எடுத்துக்கொள்ள பிறர் உதவியை நாடவேண்டும்.
மருத்துவர் ஆலோசனைப்படி, முறையான உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். உணவுக்கட்டுப்பாட்டில்
மன உறுதி இருந்தாலே உடல்நல பாதிப்பு குறித்த பல பிரச்னைகளை தவிர்க்கலாம். முறையான நடைப்பயிற்சி
இருந்தால் நலம் .இல்லையேல், அருகில் உள்ள பூங்கா , கோவில்களில் சுற்றி வருவது அல்லது
குழந்தைகளுக்கு துணையாக பள்ளிக்கு சென்று வருவது என முதியோர் தாமே உரிய வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
முதுமை என்பது உடலுக்குத்தானே தவிர
, மனத்தை எப்போதும் இளமையாக , உற்சாகமாக வைத்துக்கொள்ளலாம். [Idle mind is devil's Workshop ] என்று ஒரு அறிஞர் கூறியுள்ளார். மனதை அலைபாய விடாமல்
புத்தகங்கள் படிப்பது , ஏதேனும் இசை கேட்டு ரசிப்பது , ஆன்மீகத்தில் ஈடுபாடு இருந்தால்
வழிபாட்டுப்பாடல்கள் - தோத்திரங்கள் படிப்பது , தியானத்தில் ஈடுபடுவது என நேரம் செலவிடலாம்.
கணினிப்பயிற்சி இருந்தால் , இன்டர்நெட்டில் உற்சாகமாக பொழுதுபோகும். முழுநேரமும் தொலைக்காட்சிக்கு
அடிமையாகாமல் , அவ்வப்போது ஆன்மீகம் , இசை , சொற்பொழிவு , கிரிக்கெட் . கால்பந்து போன்ற
விளையாட்டு நிகழ்ச்சிகளைக் காண ஒன்றிரண்டு மணி நேரம் மட்டும் செலவிடலாம். முதியோர்களுக்கு ஏற்படும் நினைவுத்திறன் குறைபாட்டை
தவிர்க்க , பத்திரிகைகளில் தினசரி வருகிற
‘ சுடோகு ’ என்கிற கட்டங்களில் எண்களை பூர்த்தி செய்யும் பயிற்சியை தினமும்
சில நிமிஷங்கள் செய்வது பலன் தரும். மனநலம் நன்றாக இருந்தால் , உடல்நலமும் ஓரளவு நன்றாகவே
இருக்கும்.
முதியோர்களின் சிந்தனை , செயல் , பேச்சு எல்லாம்
நேர்மறையாக இருந்தால் [Positive thinking and positive approach] ,அவர்கள் கூறும் ஆலோசனைகளுக்கும் , ஆறுதல் வார்த்தைகளுக்கும்
மற்றவர்களிடம் உரிய மதிப்பு இருக்கும்.
இயன்றவரை மற்றவர் யாருக்கும் சிரமம் தராமல் , முதியவர்கள்
பிறருக்கு சிறிய உதவிகளை செய்து கொண்டு , வேதனையில் இருப்போருக்கு ஆறுதல் வார்த்தைகளை
கூறி நம்மாலும் பிறருக்கு உதவியாக இருக்க முடியும் என்ற மனநிறைவுடன் இருக்கலாம். அன்புடனும்
, பொறுமையுடனும் ,உற்சாகத்துடனும் பழகும் முதியவர்களிடம் எல்லாருக்கும் பரிவும் , மரியாதையும்
ஏற்படும். அவர்களும் உற்சாகமாக பழகுவார்கள்.
முதுமையில் இன்னும் பணம் - பொருள் என்று ஏங்காமல் , எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் , ரசனை உணர்வுடன்
இயன்றவரை கட்டுப்பாடாக வாழ்ந்தால் முதுமை என்பது
ஆனந்தமே.
Comments
Post a Comment